விமானப் பயணத்தின் போது நடுவானில் குழந்தை பிறப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். அப்படிப் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படும் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. இதற்கான விதிகள் நாடு தோறும் மாறுபடுகின்றன.
சில நாடுகள், தங்களது வான் எல்லைக்குள் விமானம் பறக்கும் போது குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு தங்களது நாட்டின் குடியுரிமையை வழங்குகின்றன. இதற்கு அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் எடுத்துக்காட்டாகும். ஒரு சர்வதேச விமானம் அமெரிக்க வான்பரப்பில் பறக்கும் போது குழந்தை பிறந்தால், பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் பெரும்பாலான நாடுகள் “ரத்த உறவு சட்டம்” எனப்படும் முறையை பின்பற்றுகின்றன. இதன் படி, குழந்தை எங்கு பிறந்தாலும், அதன் பெற்றோரின் குடியுரிமையே அந்தக் குழந்தைக்கும் வழங்கப்படும். உதாரணமாக, இந்தியப் பெற்றோருக்கு நடுவானில் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை இந்தியக் குடிமகனாகவே கருதப்படும்.
சில சந்தர்ப்பங்களில், விமானம் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நாட்டின் சட்டப்படி குழந்தையின் குடியுரிமை தீர்மானிக்கப்படும். 1961 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின் படி, கடலுக்கு மேலான சர்வதேச வான்பரப்பில் குழந்தை பிறந்தால், அந்த விமானம் எந்த நாட்டுக்குச் சொந்தமானதோ, அந்த நாட்டின் எல்லைக்குள் பிறந்ததாகக் கருதப்படுகிறது.
குழந்தை பிறந்தவுடன், விமானத்தின் கேப்டன் இந்த தகவலை அருகிலுள்ள வான் கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிப்பார். பின்னர், விமானம் தரையிறங்கும் நாட்டின் அதிகாரிகளிடம் குழந்தையின் பிறப்பு தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படும்.
