பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
இதுதொடர்பாக வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17ஆம் தேதி பீகாரில் நடை பயணம் தொடங்கினார். 16 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நிறைவுபெறுகிறது.
இந்த யாத்திரையில் காங்கிரஸ் மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தர்பங்கா முதல் முசாபர்பூர் வரை நடந்த யாத்திரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , கனிமொழி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பீகார் பயணத்தை, தேர்தல் வியூக நிபுணரும் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் கூறுகையில், “தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார்கள், இழிவுபடுத்தப்படுகிறார்கள். அப்போது ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை; ‘கூலி வேலை செய்வது பீகாரிகள் மரபணுவில் உள்ளது’ என்று ரேவந்த் ரெட்டி பேசினார். அவரை காங்கிரஸ் கவுரவிக்கிறது. பீகாரிகளை அவமதிப்பவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது” என்று விமர்சித்துள்ளார்.