ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக நகரத்தின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு அடிக்கடி பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனால் பலர் மின்சார ரயில்களை பயன்படுத்தி வண்டலூர் வரை பயணம் செய்து, அங்கிருந்து ஆட்டோ அல்லது பேருந்து மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்கின்றனர்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில், வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே ரூ.20 கோடி மதிப்பில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த பணிகளை 2024 நவம்பர் மாதத்திற்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருந்தது. ஆனால், மழை காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் 2025 ஜனவரி மாதத்தில் பணிகள் மீண்டும் வேகமெடுத்தன. மார்ச் மாத இறுதிக்குள் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் சில காரணங்களால் பணிகள் தாமதமானது.
ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. நடைமேடையில் மேற்கூரை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. மேலும், கூடுதலாக 100 மீட்டர் நீளத்திற்கு நடைமேடை அமைக்கும் பணிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால், ரயில் நிலையம் உடனடியாக திறக்கப்படமாட்டாது, மேலும் குறைந்தது ஒரு மாதம் காத்திருப்பதே வேண்டிய நிலை உள்ளது.
