EPFO உறுப்பினர்களுக்கு பல புதிய வசதிகளை வழங்கும் EPFO 3.0 திட்டம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. முழுக்க முழுக்க டிஜிட்டல் தளத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு, PF சேவைகளை மேலும் வேகமாகவும் சிரமமில்லாமல் பெறுவதற்கும் உதவும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, EPFO-வின் அனைத்து பணிகளும் காகிதமற்ற முறையில் நடைபெறும். உறுப்பினர்களின் தகவல்களை துல்லியமாக ஆய்வு செய்து, தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்படும். மேலும் சேவைகளை வழங்குவதற்காக இந்த அமைப்பில் செயற்கை நுண்ணறிவு அதாவது AI தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தரவு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் மோசடி நடவடிக்கைகளை தடுக்கவும் இந்த தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும் என கூறப்படுகிறது.
குறிப்பாக, உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கும் வரை காத்திருக்காமல், PF தொகையை தானாகவே அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் வசதியும் இந்த EPFO 3.0 திட்டத்தில் இடம்பெற உள்ளது. உறுப்பினர்களுக்கு மிகவும் பயனளிக்கும் மாற்றமாக, PF தொகையை ஏடிஎம் மூலமாக நேரடியாகப் பெறும் விதமான ஏற்பாடுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் கடந்த ஜூன் மாதமே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் முன்னோடி ஆய்வுகள் காரணமாக செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படாத நிலையில் இருந்தாலும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் EPFO 3.0 முழுமையாக செயல்பாட்டில் வரும் வாய்ப்பு அதிகமாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
EPFO-வின் இந்த புதிய டிஜிட்டல் முயற்சி, கோடி கணக்கான PF உறுப்பினர்களின் சேவை அனுபவத்தை மறுமலர்ச்சியடையச் செய்யும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
