தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி சென்னை, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உணவு வழங்கினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு பிஎல்ஏ-2 படிவங்களுக்கான பணிகள் முடித்து தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாநாட்டுக்காக தேமுதிக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். மாநாட்டில் ஒரு நல்ல அறிவிப்பு கிடைக்கும். தைப் பிறந்தால் வழிபிறக்கும் என்பது போல பொங்கலுக்குப் பின்னர் தமிழகத்தின் அரசியலுக்கும் நல்ல வழி பிறக்கும்.
தேமுதிக-வோடு அனைவரும் தோழமையோடும் நட்போடும் உள்ளனர். கூட்டணி குறித்தோ, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து உரியநேரத்தில் நல்ல தகவலை அளிப்போம். 2026 தேர்தலில் 234 தொகுதிகளும் எங்களுக்கு இலக்குதான். என்றாலும் அதிகாரபூர்வமாக தேமுதிக-வுடன் இதுவரை யாரும் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
