தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. ஒரு வேளை பெயர் நீக்கப்பட்டால் அதன் காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் தெளிவாக ஒட்டப்படும் என்றும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
‘தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்ற பட்டியலில் தீவிர சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக மொத்தம் 83,256 பேர் – அதாவது 68,470 பிஎல்ஓ-க்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிஎல்ஏக்கள் 2,45,340 பேர் நியமனம் செய்யப்பட்டு பணியில் துணை புரிகின்றனர்.
நாடு முழுவதும் இவ்வளவு அதிக பிஎல்ஏக்கள் ஒரே மாநிலத்தில் செயல்படுவது தமிழகத்தில்தான் என்று அவர் தகவல் தெரிவித்தார். மேலும் 33,000 தன்னார்வலர்களும் உதவி செய்கின்றனர். இதுவரை 6.16 கோடி படிவங்கள் வாக்காளர்களிடம் சென்றுள்ளன. இதில் பாதி படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன.
தற்போது 2.59 கோடி படிவங்கள் கணினி முறையில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. 327 பிஎல்ஓக்கள் தங்கள் பணியை முழுமையாக முடித்துள்ளனர். சென்னையில் 96% படிவங்கள் வழங்கப்பட்டு, 50% திரும்பப் பெறப்பட்டு, 30% ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக 2 லட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
வாக்காளர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அவர்களால் முடிந்த தகவல்களை மட்டும் அளித்தால், மீதி தகவல்களை பொறுப்புப் பேராசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிறைவு செய்வார்கள். தவறான தகவல் அல்லது ஆதாரம் இல்லாமல் பெயர் நீக்கப்படாது. இறப்பு, வீட்டுமாற்றம், நிரந்தர இடமாற்றம், இரட்டை வாக்குரிமை அல்லது படிவம் சமர்ப்பிக்காமை ஆகிய காரணங்களில் ஏதேனும் இருந்தால் மட்டுமே பெயர் நீக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 4. அதன் பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
