Saturday, February 22, 2025

சைப் அலிகான் ‘கத்திக்குத்து’ விவகாரம்… ஸ்டேட்மெண்டில் ‘கரீனா கபூர்’ சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்… உச்சக்கட்ட ‘அலெர்ட்டில்’ மும்பை போலீஸ்

அரச குடும்பத்தின் வாரிசும், பாலிவுட் நடிகருமான சைப் அலிகானை, கடந்த 16ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையின் இதய பகுதியான பாந்ராவில் உள்ள சொகுசு அபார்ட்மெண்டில் சைப் அலிகான் மனைவி கரீனா கபூர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவ தினத்தில் கரீனா சகோதரி வீட்டுக்கு சென்றுவிட, வீட்டில் சைப் அலிகான் குழந்தைகளுடன் இருந்தார்.

நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையன் பணியாளரை தாக்கும் சத்தம் கேட்டு அங்கு விரைந்த சைப் கொள்ளையனை மடக்க முயற்சித்த போது, அவன் கத்தியால் 6 இடங்களில் அவரைத் தாக்கிவிட்டு தப்பித்து விட்டான்.

இந்த விவகாரத்தால் மும்பை பாதுகாப்பற்ற நகரமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே போலீசார் 40க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து தப்பிச்சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும், அவனை கைது செய்ய முடியவில்லை. இதற்கு அவன் அடிக்கடி உடைகளை மாற்றிக்கொண்டே இருப்பதும் ஒரு காரணமாகும்.

இந்தநிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தற்போது பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளன. அதன்படி சம்பவ தினத்தன்று சைப் அலிகானை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, அவரது மூத்த மகன் இப்ராஹிம் என்றே பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் அது உண்மையில்லை. அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றது அவரது 7 வயது மகன் தைமூர். அப்பாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு தைமூர் அந்த அதிகாலையில் ஹாஸ்பிடல் சென்றுள்ளார். இதை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.

சைப்பின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான கரீனா கபூர் போலீசில் இதுதொடர்பாக அளித்த ஸ்டேட்மெண்ட் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கரீனா, ‘வீட்டின் முன்பகுதியிலேயே விலையுயர்ந்த நகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

ஆனால் வந்த நபர் நகைகளைக் கொள்ளையடிக்க முயற்சி செய்யவில்லை. அவரின் நோக்கம் சைப்பினை அட்டாக் செய்வதாக மட்டுமே இருந்தது. இதனால் எங்களது குடும்பத்தினர் அவனிடம் இருந்து தப்பித்து 12வது மாடியில் இன்னொரு வீட்டிற்கு சென்றனர்,” என தெரிவித்து உள்ளார்.

எனவே வந்த மர்ம நபரின் நோக்கம் சைப் அலிகானைத் தாக்குவது தான் என்பது, இதன்மூலம் தெளிவாகி இருக்கிறது. இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபரினைத் தேடும் முயற்சியில் வெகுவாக தீவிரம் காட்டி வருகின்றனர். அவனைக் கைது செய்தால் மட்டுமே இந்த விஷயத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பது தெரியவரும்.

இதற்கிடையில் போலீசார் சைப் அலிகானின் வீடு மற்றும் தற்போது கரீனா தங்கியிருக்கும், அவரது சகோதரி கரிஷ்மா கபூரின் வீடு ஆகியவற்றுக்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கின்றனர். சைப் அலிகானுக்கு நேர்ந்த இந்த கத்திக்குத்து சம்பவம் பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest news