இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 2க்கு 2 என சமனில் முடிந்த நிலையில், துணை கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் தற்போது காயத்தால் வெளியேறியுள்ளார். மான்செஸ்டரில் நடந்த 4வது டெஸ்டில், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து பண்டின் இடது பாதத்தில் நேரடியாகப் பட்டு எலும்பு முறிவால் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது ரிஷப் பண்ட் இல்லாத இந்திய டெஸ்ட் அணியை கற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. ஒரு காலத்தில் கபில்தேவ், பின்னர் சச்சின் இல்லாத அணியை யோசிக்க முடியாதது போல, இப்போது அதே இடத்தில் பண்ட் இருக்கிறார். இருப்பினும், அவர் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பதே நிச்சயமாகத் தெரிகிறது. அக்டோபர் 2ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் இந்தத் தொடருக்கான அணியை செப்டம்பர் 24ம் தேதி அதாவது நாளை தேர்வுக்குழு அறிவிக்கவுள்ளது. அதில் பண்ட் இடம்பெற வாய்ப்பு இல்லை.
தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். பிசிசிஐ மருத்துவக் குழுவின் அனுமதி கிடைத்த பிறகே அவர் மீண்டும் கீப்பிங் மற்றும் பேட்டிங்கைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இத்தொடரில் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பது தகவல்.
அக்டோபர் 19ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரிலும் பண்ட் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு. அதேசமயம், சர்பராஸ் கான் போன்ற மிடில் ஆர்டர் வீரருக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் தேர்வுக்குழு ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என கூறப்படுகிறது. பண்ட் மீண்டும் எப்போது அணிக்குள் நுழைவார் என்பது இன்னும் புதிராகவே உள்ளது.