இந்திய தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமான EVM-இல் ‘நோட்டா’ (NOTA) என்ற ஒரு ஆப்ஷன் வழங்கப்படுகிறது. எந்த வேட்பாளரையும் விரும்பாத வாக்காளர்கள் இதை பயன்படுத்தலாம்.
NOTA என்பதன் விரிவாக்கம் “மேற்கூறியவற்றில் எதுவுமில்லை” என்பதாகும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரையும் ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்துவது ஒரு வாக்காளரின் உரிமையாகும். ஆனால், NOTA ஒரு வேட்பாளராக கருதப்படுவதில்லை. அதனால், அது அதிக வாக்குகள் பெற்றாலும், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படாது. இது வெறும் ஒரு கருத்து வெளிப்பாடாக மட்டுமே இருக்கும்.
இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி, தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் போது NOTA வாக்குகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. எனவே, NOTA அதிக வாக்குகள் பெற்றாலும், உண்மையான வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
தற்போதைய சட்டங்களின்படி, NOTA பெரும்பான்மை வாக்குகள் பெற்றாலும் தேர்தல் ரத்து செய்யப்படாது. மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் NOTA அடிப்படையில் தேர்தலை ரத்து செய்யும் விதி இதுவரை இல்லை.
எனினும், சில மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, மகாராஷ்டிரா மற்றும் அரியானா போன்ற மாநிலங்களில், NOTA அதிக வாக்குகள் பெற்றால் மறுதேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, NOTA வாக்குகள் தேர்தல் முடிவை மாற்றாது. ஆனால், அது அரசியல் கட்சிகளின் மீது மக்களின் அதிருப்தியை தெளிவாக வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான கருவியாக உள்ளது.
