தற்போது கோலடைக்காலம் என்றாலும் கூட பலருக்கு காலையில் எழுந்தவுடன் டீ குடிக்காமல் அன்றைய நாள் தொடங்காது.சிலர் இந்த சூடான மற்றும் சிறப்பான சுவை கொண்ட பானத்திற்கு அடிமையாக வாழ்கிறார்கள் என்று சொன்னால் கூட மிகையாகாது.ஏனென்றால் டீ-க்கு அடிமையாக இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை அலல்து அதற்கும் மேல் கூட டீ குடிப்பார்கள்.
குறிப்பாக டீ-யின் சுவை, அதிலிருக்கும் காஃபின் மற்றும் நறுமணம் மனதை அமைதிப்படுத்துகிறது, ஆற்றல் அளிக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. இதுக்கெல்லாம் மேலாக சூடான டீ குடித்தால் தலைவலி கூட ஓடிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள்..
இதனைத் தொடர்ந்து மிதமான அளவில் டீ அருந்துவதால் பல நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சூரியன் சுட்டெரிக்கும் கோடை சீசனில் அதிகமாக டீ அருந்துவது நல்லதல்ல. இதில் உள்ள காஃபின் வெப்பமூட்டும் பண்புகளை கொண்டிருப்பதால் கோடை காலத்தில் அதிகமாக டீ குடிப்பது மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள் . கோடை சீசனில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் டீ குடித்தால் என்னென்ன பக்கவிளைவுகள் ஆகும் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
டீ-யானது அசிடிட்டி, உப்புசம் மற்றும் வாயு பிரச்சனைக்கு விளைவிக்கிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் டீ அருந்தும் போது இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்ற காலநிலையை விட கோடையில் இன்னும் நிலைமை மோசமாகும். நீண்டநாட்கள் வெறும் வயிற்றில் அல்லது வெயில் நேரத்தில் அதிகம் டீ குடிப்பதால் ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் அல்சர் போன்றவைகளுக்கு வழிவகுக்கிறது.
கோடையில் வெயில் கொளுத்தும் என்பதால் வெப்பமான காலநிலை காரணமாக, இயற்கையாகவே வியர்வை அதிகமாக வெளியேறும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இந்த நேரத்தில் டீ குடிப்பது நீரிழப்பு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது . அது மட்டுமின்றி டீ-யில் உள்ள காஃபின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆகையால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனால் படிப்படியாக இது தலைவலி, சோர்வு மற்றும் தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் விளைவிக்கிறது.
டீ-யில் உள்ள காஃபின் ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்தை வேகமாக செயல்பட வைக்கிறது. இதனால் இதய பிரச்சனைகள் ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே ரத்த அழுத்தம் அல்லது இதய நோய்கள் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கோடையில் அதிகமாக டீ குடிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
டீ-யில் உள்ள காஃபின் நரம்புகளைத் தூண்டி மூளையை ஆக்டிவாக வைக்கிறது. இதனால் சீக்கிரம் தூங்குவது கடினமான ஒன்றாகும். குறிப்பாக கோடையில் அதிகம் டீ குடிப்பது எரிச்சல் உணர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது, அது மட்டுமின்றி உடலையும் மனதையும் ரிலாக்ஸாக இருக்க விடாமல் தடுக்கிறது. இதன் விளைவாக மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
சரிப்பா.. டீ தான் குடிக்கவேண்டாம்னு சொல்லுறீங்க.. இதற்கு பதிலா என்ன குடிக்கலாம் என்று கேட்குறீங்களா?
அதாவது எலுமிச்சை தண்ணீர், இளநீர், மோர் மற்றும் காஃபின் இல்லாத மூலிகை டீ குடிக்கலாம். இந்த பானங்கள் உடலை குளிர்விப்பது மட்டுமின்றி, நீர்ச்சத்தை தக்கவைத்து, நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
குறிப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையாக கொண்டுள்ளவை ஆகும்