மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த கையோடு, இப்போது இஸ்ரேல் மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே ஒரு புதிய ராஜதந்திரப் போர் வெடித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை யாரோ சதி செய்து குலைக்கப் பார்க்கிறார்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரித்திருந்தார். இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கும், அதன் ஆதரவு அமைப்புகளுக்கும் எதிரான எங்களது போராட்டம் ஒருபோதும் நிற்காது” என அதிரடியாக அறிவித்துள்ளார்.
துருக்கி அதிபர் எர்டோகனை மிகக் கடுமையாகச் சாடிய நெதன்யாகு, “சொந்த நாட்டு மக்களான குர்து இனத்தையே கொன்று குவிக்கும் எர்டோகன், இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கையைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்” என்று விமர்சித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், எர்டோகனை ஒரு ‘காகிதப் புலி’ என்று வர்ணித்துள்ளது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், ஈரான் மீதான ராணுவத் தாக்குதலில் இஸ்ரேல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக நெதன்யாகு மார்தட்டியுள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் முழுமையாக நசுக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது ஈரானில் ஒரு அணு செறிவூட்டல் நிலையம் கூட செயல்படவில்லை என்றும் அவர் ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
மறுபுறம், பாகிஸ்தானில் அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வேன்ஸ் நடத்திய 21 மணி நேரப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது, இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற நீண்ட கால உறுதிமொழியை வழங்க ஈரான் மறுத்துவிட்டதே இந்தத் தோல்விக்குக் காரணம். “எங்களது நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை, எனவே நாங்கள் எங்களது இறுதிச் சலுகையோடு அங்கிருந்து வெளியேறுகிறோம்” என ஜே.டி. வேன்ஸ் அறிவித்திருப்பது, போர்நிறுத்தம் எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்பதைக் காட்டுகிறது. ஒருபுறம் அமெரிக்காவின் அழுத்தம், மறுபுறம் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் எச்சரிக்கை என ஈரான் இப்போது பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
