கரீபியன் கடற்பகுதியில் மீண்டும் பெரும் பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. வெனிசுலாவிலிருந்து வந்த மற்றொரு சந்தேகத்திற்குரிய படகை அமெரிக்க ராணுவம் நடுக்கடலில் இடைமறித்து தாக்கியதில், மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நாங்கள் உங்களை வேட்டையாடுவோம்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். கரீபியன் கடலில் உண்மையில் என்னதான் நடக்கிறது? விரிவாகப் பார்க்கலாம்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நேரடி உத்தரவின் பேரில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் குறிப்பிடும்போது, “தெற்கு கட்டளைப் பகுதியின் கீழ், மிகக் கொடூரமான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவப் படைகள் இரண்டாவது வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளன. அமெரிக்க மக்களை விஷமாக்கும் கொடிய ஆயுதமான சட்டவிரோத போதைப்பொருட்கள் எங்கள் நாட்டிற்குள் வருவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம், கரீபியன் பகுதியில் ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியுள்ளது. காரணம், சமீப காலமாக அமெரிக்கா தனது பிரம்மாண்டமான போர்க்கப்பல்களை வெனிசுலாவைச் சுற்றி குவித்து வருகிறது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை என்று அமெரிக்கா கூறினாலும், இது வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியோ என்ற பலத்த சந்தேகம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. USS கிரேவ்லி போன்ற அதிநவீன ஏவுகணை அழிப்பான் போர்க்கப்பல்கள் இந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டிருப்பது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
உண்மையில், இதுபோல நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் இதேபோல நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில், வெனிசுலாவின் ‘ட்ரென் டி அரகுவா’ என்ற பயங்கரமான கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறி 11 பேரை அமெரிக்க ராணுவம் கொன்றது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை வெனிசுலா அரசு அடியோடு மறுத்துள்ளது.
வெனிசுலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ(Diosdado Cabello) இதுபற்றி பேசும்போது, “அமெரிக்கா 11 பேரைக் கொன்றதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. நாங்கள் எங்கள் நாட்டில் விசாரணை நடத்தினோம். காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உறவினர்களைத் தேடுகின்றன. கொல்லப்பட்டவர்களில் யாரும் ட்ரென் டி அரகுவா(Tren de Aragua) கும்பலைச் சேர்ந்தவர்களோ, போதைப்பொருள் கடத்தல்காரர்களோ அல்ல. அவர்கள் எப்படி இவர்களை அடையாளம் கண்டார்கள்? அவர்களிடம் ஏதாவது சிப் இருந்ததா? அல்லது QR கோடு இருந்ததா? அதை அமெரிக்க ராணுவம் வானத்தில் இருந்து இருட்டில் படித்ததா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளால் அமெரிக்காவைத் தாக்கியுள்ளார். இது அப்பாவி குடிமக்கள் மீதான படுகொலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும், தாக்குதல்கள் குறித்த கேள்விகளுக்கும் அமெரிக்கா வெளிப்படையான பதிலை அளிக்க மறுத்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத்திடம் நிருபர் ஒருவர், “கொல்லப்பட்டவர்கள் கடத்தல்காரர்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார். அதற்கு அவர் ஆணவமாக, “அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும்?” என்று திருப்பிக் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டவையா, அல்லது இது நீதிக்குப் புறம்பான படுகொலைகளா என்ற தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்காவோ, இறந்தவர்கள் கடத்தல்காரர்கள்தான் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறது.
ஒருபுறம், போதைப்பொருளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகள். மறுபுறம், இது எங்கள் நாட்டு மக்கள் மீதான தாக்குதல் என வெனிசுலாவின் கடும் எதிர்ப்பு. கரீபியன் கடலில் அதிகரித்து வரும் இந்த ராணுவ நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய மோதலுக்கு வழிவகுக்குமா? அல்லது போதைப்போர் என்ற பெயரில் வேறு ஏதேனும் அரசியல் நோக்கங்கள் மறைந்துள்ளனவா? என்பதே இப்போது பெரிய கேள்விகளாக இருக்கின்றது.
