அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே இருந்த நீண்ட கால நட்பு, இப்போது மிகப்பெரிய விரிசலைச் சந்தித்திருக்கிறது! “எங்கள் போர் விமானங்களை நீங்கள் வாங்கவில்லை என்றால், உங்கள் நாட்டு வான எல்லையை நாங்களே பாதுகாக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா விடுத்திருக்கும் மிரட்டல், கனடாவை ஆடிப் போக வைத்திருக்கிறது.
கனடா தனது ராணுவத்தை வலுப்படுத்த, அமெரிக்காவிடமிருந்து 88 அதிநவீன F-35 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆரம்பத்தில் இதன் மதிப்பு 19 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இப்போது அதன் விலை 27.7 பில்லியன் டாலராக எகிறியதாலும், டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்படுவதாலும், கனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு “இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்கிறோம், எண்ணிக்கை குறைக்கப்படலாம்” என்று கூறியது.
இங்குதான் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா (Pete Hoekstra) என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “ஒப்பந்தப்படி 88 விமானங்களை கனடா வாங்கவில்லை என்றால், கனடாவின் வான் பாதுகாப்பில் இடைவெளி விழும். அந்தப் பாதுகாப்பை உறுதி செய்ய, அமெரிக்க விமானப் படை கனடாவுக்குள் நுழைய வேண்டிய நிலை வரும்” என்று மறைமுகமாக எச்சரித்துள்ளார். அதாவது, “உங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால், நாங்கள் உள்ளே வருவோம்” என்பது போல இது இருக்கிறது. இது கனடாவின் இறையாண்மைக்கே விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கிரீன்லாந்து விவகாரத்திலும், சீனாவுடனான வர்த்தகத்திலும் ட்ரம்ப் கனடாவைக் கடுமையாகச் சாடியிருந்தார். “அமெரிக்காவுடன் நிற்கவில்லை என்றால், சீனா உங்களைச் சாப்பிட்டுவிடும்” என்று ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இப்போது இந்த F-35 விமான சர்ச்சை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளது.
