வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேர்க்காடு என்ற பகுதியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று முகாமை பார்வையிட்டு
பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் “தமிழக அரசு பருவமழை தொடர்பாக இரண்டு வகைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஒன்று பருவமழைக்கு முன்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதற்காக ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று நீர்வளப்பாதைகளை செப்பனிடுதல், நீர்நிலைகளை பத்திரப்படுத்துதல், புதிய கால்வாய்களை ஏற்படுத்துதல் இவைகள் எல்லாம் 160 கோடி ரூபாய் மதிப்பீடு செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பொறுத்த வரை எவ்வளவு மழை வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் நீதிமன்றம் தவெக கட்சிக்கு கண்டனத்தை தெரிவித்து, இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியது நீதிபதி சொல்வது அதற்கு எதிர்ப்பு செல்லக்கூடாது. நீதிபதி சொல்வதற்கு நாம் எதுவும் சொல்லக்கூடாது. நீதிபதிகள் எதை சொன்னாலும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும் ஆனால் அவர்கள் உண்மையை சொல்லி உள்ளார்கள்.
மேலும், அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை வேறு 41பேர் உயிரிழந்த சம்பவம் இது லேசான காரியமா?, அனைத்து ஊடகங்களும் உலகமே இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய சம்பவம் இது. அதானால் தான் முதல்வர் உடனடியாக சென்றார்.
மேலும், பேசிய அவர்: விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, விஜயை கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம். தேவையில்லாத சூழலில் பண்ண மோட்டோம். அனாவசியமாக நாங்க யாரையும் கைது செய்ய மாட்டோம் என்று துரைமுருகன் கூறினார். தற்போது இது பெரும் பேசுபொருளாகியுள்ளது.