ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபுறம் பெரும் சிக்கலில் சிக்கியிருக்க, மறுபுறம் ஈரானின் உச்சகட்ட அதிகார மட்டத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கிளம்பியுள்ள செய்திகள், உலக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் ‘சேனல் 12’ வெளியிட்ட ஒரு செய்தி, ஈரானின் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் காலிபாப் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறியது. ஈரானின் புரட்சிகர காவலர் படையான ஐ.ஆர்.ஜி.சி (IRGC)-இன் தலையீடு காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக அந்தச் செய்தி குறிப்பிட்டிருந்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே ஈரானிய ஊடகங்கள் இதனை ஒரு பொய்யான வதந்தி என்று திட்டவட்டமாக மறுத்துள்ளன.
ஈரானியப் பத்திரிகையாளர் முகமது கதேரி, “இது இஸ்ரேல் திட்டமிட்டுப் பரப்பும் ஒரு அபத்தமான கட்டுக்கதை” என்று கடுமையாகச் சாடியுள்ளார். இந்தக் குழப்பத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அதிகார மையத்தில் பிளவு இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பகிரங்கமாகப் பதிவிட்டுள்ளார். ஈரானில் “தீவிரவாதிகள்” மற்றும் “மிதவாதிகள்” என இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடப்பதாகக் கூறிய ட்ரம்ப், யார் தலைவன் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை என்று கேலியும் செய்துள்ளார்.
ஆனால், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஈரானில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று யாரும் இல்லை, அனைவரும் ஈரானியப் புரட்சியாளர்களே என்றும், நாடும் ஆட்சியும் இரும்பைப் போன்ற ஒற்றுமையுடன் இருப்பதாகவும் காட்டமான பதில் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஈரானின் உச்சகட்டத் தலைவர் மொஜ்தபா கமேனியின் அறிக்கையும் கவனத்தைப் பெற்றுள்ளது. தங்களுக்குள் பிளவு இருப்பதாகச் சொல்லப்படும் செய்திகளைத் தவிடுபொடியாக்க முயன்றுள்ள அவர், “எதிரிகளின் ஊடகங்கள் பரப்பும் பொய்கள், நம் நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமையை உடைக்கப் பார்க்கின்றன” என்று கூறியுள்ளார்.
உண்மையில், ஈரானில் நடப்பது அரசியல் பிளவுதானா அல்லது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் இருந்து கிளப்பப்படும் ஒரு தகவல் போர் (Information War) தானா என்ற சந்தேகம் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எது எப்படியோ, பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் இருக்கும் இந்த வேளையில், இத்தகைய செய்திகள் ஈரானின் நிலையை மேலும் பலவீனப்படுத்துவதற்கான ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் இந்தத் திடமான ஒற்றுமை அறிக்கை, அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிய மாட்டோம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.
