முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தது தவறான முடிவு என அவரது ஆதரவு நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்த பாரதியார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.கவில் இணைந்து விட்டார். அவர் சூழ்நிலை காரணமாக தி.மு.க.வில் இணைந்து இருந்தாலும் அவர் எடுத்த இந்த முடிவு என்பது தவறான முடிவு.
அவர் தி.மு.க.வில் இணைந்ததை அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்று விட்டதால், நாங்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளோம். இன்றோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாகிய நாங்கள் இணைய உள்ளோம்.
தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. வருகிற தேர்தலில் விஜயை முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவதற்காக நாங்கள் தீவிர களப்பணியாற்ற உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
