சென்னை அம்பத்தூரில் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ள பட்டா வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “திமுக ஆட்சி அமைந்த பிறகு மக்கள் கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து 6 முறை பங்கேற்று 20000 பேருக்கு மேல் பட்டா வழங்கியுள்ளார்.
அந்த வகையில் அம்பத்தூர் ராமசாமி பள்ளியில் வரும் 25ஆம் தேதி 6000 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. இதற்காக அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். பட்டா வழங்கப்படும் 25 ஆம் தேதி வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகன நிறுத்தம், தண்ணீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளோம். எனவே இந்த பட்டா வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்” என்று தெரிவித்தார்.