Wednesday, January 7, 2026

யார் இந்த வாரன் பஃபெட்? அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

‘பங்குச் சந்தையின் பிதாமகன்’ என அழைக்கப்படும் வாரன் பஃபெட், உலகம் முழுவதும் உள்ள தொழிலதிபர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த இவர், 1965ஆம் ஆண்டில் ‘பெர்க்ஷயர் ஹேத்வே’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நேரத்தில், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தது.

வாரன் பஃபெட் தலைமையேற்ற பிறகு, நிறுவனம் மெதுவாக நஷ்டத்தில் இருந்து மீளத் தொடங்கியது. பின்னர் காப்பீடு, ரயில்வே, சாலை போக்குவரத்து, எரிசக்தி மற்றும் நுகர்வோர் தேவைக்கான பல்வேறு பிராண்டுகளில் முதலீடுகளை அதிகரித்தது. இதன் விளைவாக, பெர்க்ஷயர் ஹேத்வே நிறுவனம் தொடர்ந்து அதிக லாபத்தை ஈட்டத் தொடங்கியது.

இன்றைய நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகள் 7,50,000 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. குறிப்பாக பங்குச் சந்தை முதலீட்டில் பெரும் வெற்றியைப் பெற்றதன் காரணமாகவே, வாரன் பஃபெட் ‘பங்குச் சந்தையின் பிதாமகன்’ என்ற பட்டத்தை பெற்றார். நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அவர் கருதப்படுகிறார்.

வாரன் பஃபெட் தலைமையில் செயல்பட்ட ‘பெர்க்ஷயர் ஹேத்வே’ நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது. தற்போது, அவர் தலைமை செயல் அதிகாரியாக இல்லாவிட்டாலும், செயல் சாரா தலைவராக தொடர்ந்து செயல்படுவார் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலீட்டில் சிறந்த நிபுணரான வாரன் பஃபெட், உலக முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர். தனது முதலீட்டு திறமையால், தற்போது சுமார் 140 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சொத்துகளுக்கு அதிபதியாக உள்ளார்.

‘பெர்க்ஷயர் ஹேத்வே’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து 2025 டிசம்பர் 31ஆம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார்.

சுமார் 60 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்த அவர், நஷ்டத்தில் இருந்த நிறுவனத்தை உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக உயர்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அபாரமான முதலீட்டு திறமையின் மூலம், இன்று உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக வாரன் பஃபெட் திகழ்ந்து வருகிறார்.

Related News

Latest News