பீகாரை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற SIR என்கிற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது.
கடந்த 19-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை எளிதாக அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் புதிய SMS வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த, உங்கள் மொபைல் போனில் ECI என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை (அதாவது ECI SXT000001) என்று பதிவிட வேண்டும்.
அதனை 1950 என்ற எண்ணுக்கு SMS ஆக அனுப்பினால், சில நொடிகளில் உங்கள் செல்போனுக்கு பதில் குறுஞ்செய்தி வரும்.
அந்த மெசேஜில் உங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் விவரம் உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால், BLO (Booth Level Officer) யை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவிக்கும் மெசேஜ் வரும்.
முகாமுக்கு நேரடியாக செல்ல இயலாதோர் https://www.eci.gov.in/voters-services-portal என்ற இணையதளம் மற்றும் Voter Helpline App செயலியில் விண்ணப்பிக்கலாம்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், தங்களை மீண்டும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு ஜனவரி 18ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
