இங்கிலாந்தின் தொலைதூரத்திலுள்ள ஃபர்னஸ் தீபகற்பத்தின் முடிவில் கும்பிரியா கடற்கரையில் ஓர் அழகிய தீவு உள்ளது.
பீல் தீவு என்று அழைக்கப்படும் இது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடற்கரையிலிருந்து படகுமூலம் இந்தத் தீவுக்குச் செல்லலாம். ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தத் தீவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு 100 ஆண்டு பழமையான கோட்டையும் பாரம்பரியமான ஓர் உணவகமும் உள்ளது.
இந்தத் தீவின் மன்னர் பொறுப்புக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க இங்கிலாந்தின் பாரோ பரா கவுன்சில் விளம்பரம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் மன்னர் ஆவதற்கான தகுதிகளைக் குறிப்பிட்டிருந்தது.2022, ஜனவரி மாதம் முடியும்வரை விண்ணப்பிக்க காலவரையறை குறிப்பிடப்பட்டிருந்தது.
மன்னர் ஆவதற்கு, உறுதிமிக்கவராக இருக்க வேண்டும், வானிலை மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும், அதிகாரப் பிரச்சினைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் விஷயங்களில் சமயோசித முடிவெடுக்க வேண்டும் ஆகியவை தகுதிகளாக அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்படுபவர் பீல் தீவின் ராஜா என அழைக்கப்படுவார். அவருக்கு பீர் அபிஷேகம்செய்து மன்னர் என்னும் அங்கீகாரம் வழங்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் புதிய மன்னர் தனது கடமைகளைச் செய்யவேண்டும்.
பீல் தீவின் ராஜாவின் பணிகள் என்னென்ன தெரியுமா?
பீல் தீவுக்கு வரும் அனைவருக்கும் பீர், உணவு பரிமாற வேண்டும். மன்னர் எத்தனை பீர் வேண்டுமானாலும் பருகலாம். தீவின் பராமரிப்பையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னருக்கு நேரடி வாரிசு இல்லாவிட்டால், யானையிடமோ சிறுமியிடமோ ஒரு மலர்மாலையைக் கொடுத்து, அதை யானை அணிவிக்கும் நபரை அரசராகத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்தது. தற்போது மன்னராட்சி முடிந்துவிட்ட நிலையில், அரசு வேலைக்கு ஆள் எடுப்பதுபோல, மன்னர் பதவிக்கும் போட்டித் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்போவதாக வெளியான இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.