நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய்யை பார்க்க இன்று காலை முதலே ரசிகர்கள் குவிந்து இருந்தனர். மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், சொன்ன நேரத்தை விட 6 மணிநேரம் தாமதமாகவே பிரச்சார இடத்துக்கு வந்தார் விஜய்.
வந்ததும், நாமக்கலின் பெருமையை பற்றி பேசிய விஜய். முட்டை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் ஊர் நாமக்கல் என்று கூறினார், தொடர்ந்து பேசிய விஜய், திமுகவை தாக்கிப் பேசத் தொடங்கினார். அவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதை சுட்டிக் காட்டி பேசிய விஜய், அவர்களை மாதிரி பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம் என தெரிவித்தார்.
அதாவது, “நாமக்கல் மாவட்டத்தின் முட்டை உலகம் முழுவதும் பேமஸ். அதனால்தான் இதை முட்டை நகரம் (Egg City) என்றுகூடக் கூப்பிடுவார்கள். நாமக்கல், சத்தான உணவான முட்டையை மட்டும் கொடுக்கவில்லை, உணர்ச்சி ஊட்டியதும் நாமக்கல் மாவட்டம்தான். “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பாடிய நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் பிறந்தது நாமக்கல் மாவட்டம். இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த முன்னாள் முதல்வர் சுப்பராயன் அவர்கள் பிறந்ததும் நாமக்கல்தான்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
தொடர்ந்து, ஆளும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி விஜய் கேள்வி எழுப்பினார். “முன்னாள் முதல்வர் சுப்பராயன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்களே செய்தார்களா? {திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 456}
நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றியங்கள் தோறும் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னார்களே, செய்தார்களா? {திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 50}
கொப்பரைத் தேங்காயைத் தமிழக அரசே கொள்முதல் செய்யும், அதிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுத்து ரேஷனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்களே, நிறைவேற்றப்பட்டதா?” {திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 66} என்று அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுசா சொல்லுங்க, புதுசா சொல்லுங்கனு சொல்றாங்க, செவ்வாய் கிரகத்துல ஐடி கம்பெனி கட்டப்படும், காத்துல கல்வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும், வீட்டுக்குள்ளேயே ஏரேபிளைன் ஓட்டப்படும், இந்த மாதிரி அடிச்சு விடுவோமா… நம்ம முதல்வர் அடிச்சு விடுவாறே அந்த மாதிரி அடிச்சு விடுவோமா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார் விஜய். வருகிற தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டா அது பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரி என்று ஆவேசமாக பேசினார்.
மேலும், மோசமான ஆட்சியை கொடுக்கும் திமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வரணுமா என விஜய் கேள்வி எழுப்பியதும், வேண்டாம் என அங்கு கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பினர். இதற்கிடையே “கிட்னி திருட்டில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். தவெக ஆட்சிக்கு வந்ததும், இந்தக் கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார் விஜய்.
நாமக்கல்லில் உரையாற்றிய விஜய்க்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக நாகப்பட்டிணத்தில் அவர் உரையாற்றிய போது அவருக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு அவர் ஆட்சியை பிடித்து அரியணை ஏற வேண்டும் என வாழ்த்தி அவருக்கு நாமக்கலை சேர்ந்த தவெக தொண்டர்கள் செங்கோலை பரிசாக வழங்கி உள்ளனர்.
அந்த செங்கோலை கையில் ஏந்தி, வெற்றி நிச்சயம் என கூறினார் விஜய். அவருக்காக காலை முதலே கடும் வெயிலையும் பாராமல் ஏராளமானோர் குவிந்திருந்தனர். அவர்களை பார்த்து கையசைத்தபடி, கரூருக்கு கிளம்பி சென்றார் விஜய்.