கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விஜய், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்றுத் தெரிவித்து இருந்தார். மேலும், விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.