செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்திருந்தார். ஆரம்பத்தில் அமர்வு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இன்று நீதிபதி சசிகலா முன்னிலையில் நடந்த விசாரணையில், இரு தரப்பினரின் வழக்கறிஞர்களும் ஆஜராகினர். விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் வக்காலத்து தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது, அடுத்த தேதி குறித்து நீதிபதி கேட்டபோது, இருதரப்பினரும் வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்க கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம், வழக்கை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், விஜய் தரப்பில் முக்கியமான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் வீடியோ கான்பரென்சிங் மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு கோரப்பட்டது. இதுகுறித்து நீதிமன்றம் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. அதேசமயம், இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்கவும் விஜய் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
விஜய் மற்றும் சங்கீதா கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கிடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகினாலும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. ஜீவனாம்சம் தொடர்பாகவும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த வழக்கு தேர்தல் சூழ்நிலையில் விசாரணைக்கு வருவது அரசியல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. இருந்தாலும், விஜய் தனது தேர்தல் பிரச்சார பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
