Friday, September 26, 2025

“இரண்டு சனியங்களை சட்டையாக போட்டுக் கொண்டு சனிக்கிழமை ஆனால் விஜய் கிளம்பி விடுகிறார்” – சீமான்

சென்னை சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் ஈழ விடுதலைக்காக உண்ணாவிரதம் செய்து உயிரிழந்த திலீபன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திலீபன் புகைப்படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை கல்வி நிபுணர்களை வைத்து பேச வைத்திருக்க வேண்டும். ஆனால் இயக்குனர்களையும் திரைப்படங்களையும் பேச வைத்து இது ஒரு விளம்பர அரசு என்பதை நிரூபித்துள்ளது. அரசு பள்ளிகள் கழிவறைகள் போல உள்ளன. அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

நிலைமை இப்படி இருக்கையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது ஏற்க தகுந்தது அல்ல. திமுகவிடம் முதலீடுகளை ஈர்த்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலீடுகள் என்ன என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டார்களா? சிப்காட், சாம்சங், நோக்கியா தவிர நீங்கள் கொண்டு வந்த நிறுவனங்கள் என்ன? உலக நாடுகளை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கும் நம் நாடு ஏன் வெளிநாடுகளில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கவில்லை.

சிப்காட் அமைக்கும் பகுதிகளில் 20 கிலோ மீட்டருக்கு தண்ணீரை பருக வேண்டாம் என அறிவித்து தண்ணீர் மற்றும் காற்றையும் இடத்தையும் மாசு படுத்தி விட்டீர்கள். நான் மரங்களின் மாநாடு போடும்போது விமர்சித்த திமுக இப்போது ஏன் அலையாத்தி காடுகள் மாநாடு நடத்துகிறது. பனை மரத்தை ஏறி நான் விழிப்புணர்வு செய்த போது சாதி மரம் கிண்டல் அடித்த திமுக இப்போது அதே பனை மரத்தை நட்டு வைத்து போட்டோ எடுத்து அனுப்புமாறு கூறும் போது அது நீதிமன்றம் ஆகிவிட்டதா என்ற கேள்விகளை எழுப்பினார்.

திமுகவின் ஆட்சி முடிய போகும் காலம் என்பதால் அனைத்து திட்டங்களுக்கும் முதலமைச்சர் அவரது தந்தை கலைஞர் பெயரை வைத்து அழகு பார்க்கிறார். நான் ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவினர் வைத்த பெயர்களை எல்லாம் பாரம்பரிய தலைவர்களின் பெயர்களாக மாற்றினேன். ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு கலைஞர் பெயரை மாற்றி மூக்கையா தேவர் அரங்கம் என்று வைப்பேன். காலை உணவில் 5 நாட்களும் உப்மா போடுவதால் இந்த அரசு ஒரு உப்புமா கம்பெனி. விஜய் மாற்றத்தை கொண்டு வருவதாக சொல்லி திமுகவிலிருந்து இரண்டு இட்லி அதிமுகவிலிருந்து இரண்டு தோசை என அனைத்தையும் பிய்த்துப் போட்டு உப்புமாவை கிண்டியுள்ளார்.

ஒரு பக்கம் அண்ணாவையும் ஒரு பக்கம் எம்.ஜி.ஆரையும் வைத்துக்கொண்டு திமுக அதிமுக என்ற இரண்டு சனியங்களைக் கொண்ட சட்டையை போட்டுக்கொண்டு சனிக்கிழமை ஆனால் கிளம்பி விடுகிறார். இதில் எந்த மாற்றமும் கிடையாது” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News