Sunday, December 22, 2024

சினிமாவுக்கு முழுக்கு போடும் விஜய்? 2026இல் CM ஆக மெகா திட்டம்…

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். பாக்ஸ் office collectionஇல் வசூலை குவிப்பதோடு தனக்கே உரிய ரசிகர் பட்டாளத்தை கட்டமைத்து, ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் 2009ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறார்.

பல ஆண்டுகளாகவே விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், 2026ஆம் ஆண்டு தேர்தலில், விஜய் நேரடி அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார் என வலுவாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகளில் பட்டும் படாமல் அரசியல் பேசி அரசியல் வட்டாரங்களில் ஆவலை அதிகரித்த விஜய், கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை களம் இறக்கியது, அவர் எடுத்த முதல் வெளிப்படையான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்ட 129 பேர் வெற்றி பெற்றது அவருக்கான அரசியல் இடத்தை சுட்டிக்காட்டியது. அதற்கு பிறகு அம்பேத்கர் பிறந்தநாள் விழா, தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

கடந்த மாதம் 29ஆம் தேதி 234 தொகுதிகளிலும் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. நீலாங்கரையில் மக்கள் இயக்க நிர்வாகிகளோடு விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 10,12ஆம் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை விஜய் சந்திக்க  திட்டமிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு உதவித் தொகையாக தலா பத்தாயிரமும் சான்றிதழும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.  இதற்காக சுமார் 2 கோடி வரை செலவு ஆகும். ரசிகர் மன்றம் நற்பணி மன்றமாக மாறி, இன்றைய சூழலில் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வரும் அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுக்கப் போகும் அறிகுறிகள் தீவிரமடைந்து வருகின்றது. இது மட்டுமில்லாமல் விஜய் 70வது படத்தோடு தன்னுடைய திரைப்பயணத்தை முடித்து விட்டு முழுநேர அரசியலில் களம் இறங்க போவதாக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த முன்னெடுப்புக்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சாதகமாக அமைந்தாலும், விஜய் மேலும் நிறைய படங்கள் நடித்து தங்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே கடைநிலை ரசிகனின் மனநிலையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Latest news