அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த விஜய்? : சேலத்தில் இபிஎஸ் நறுக் பதில்

சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் சேலத்தில் இன்று நடைபெற்ற மகளிர் தின சிறப்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 40 கிலோவில் செய்யப்பட்டிருந்த கேக் வெட்டி கொண்டாடினார்.

சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி, அதிமுக மகளிரணிச் செயலாளர் லலிதா சரவணன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விக்கு இபிஎஸ் பதிலளித்தார்.

கேள்வி : விஜய் முழுக்கவே அதிமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து சொல்லியிருப்பதுபோல் இருக்கிறதே?

இபிஎஸ் : என்னிடம் இதை கேட்டால் எப்படி..? நீங்கள் இந்த கேள்வியை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

கேள்வி : இலவசம் அறிவிக்கமாட்டேன்னு சொல்லி, அவரே அறிவிச்சிருக்காரே?

இபிஎஸ் : ஒவ்வொரு கட்சியும் அந்த கட்சியின் நிலைப்பாட்டைக் கருதி தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள். நான் மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாய் அறிவித்த பிறகு, திமுக தலைவர் ஸ்டாலினும் அறிவித்திருக்கிறார்.

கேள்வி : மகளிர் தினத்துக்கு அதிமுக சார்பாக அறிவிப்பு இல்லையா?

இபிஎஸ் : நிறைய அறிவிப்புகள் கொடுத்திருக்கிறோம். பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் கொடுத்தோம். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் கொடுத்தோம். இன்று எக்ஸ் தளத்தில் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று போட்டிருக்கிறோம். இவற்றை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேருங்கள்.

கேள்வி : மகளிருக்கு நீங்க 2,000 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னீர்கள். ஆனா விஜய் 2,500 ரூபாய் என்று சொல்லி இருக்கிறாரே?

இபிஎஸ் : நான் தான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில், அந்த கட்சியின் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். நாங்கள் எங்கள் கட்சியின் சார்பாக எங்களுடைய மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைப்படி அறிவித்தோம்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்பத் தலைவிக்கு 2,000 ரூபாய் மாதந்தோறும் வங்கியில் செலுத்தப்படும். அதேபோல் அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தை அம்மா அறிவித்தார்கள். திமுக ஆட்சியில் அது நிறுத்தப்பட்டது.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இருசக்கர வாகனம் வாங்கும் மகளிருக்கு 25,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். 5 லட்சம் பேருக்கு கொடுக்கப்படும்.

Related News

Latest News