“உங்க கிட்ட 4 கிராம் தங்கம் இருந்தா கூட பொக்கிஷம் மாதிரி வைச்சிக்கோங்க…” என்று சொல்ல வைத்துவிட்டது தங்கம் விலை உயரும் வேகம். அட… “அது தான் எட்டிக்கூட பிடிக்கமுடியாத உச்சத்துக்கு போய்விட்டதே” என்று நம்மில் பலரை கதறவிட்டுவிட்டது என்றாலும் தற்போது தங்கத்தின் விலை உலக அளவில் புதிய சாதனை அளவை தொட்டு இருக்கிறது.
சீனாவுக்கு எதிரான டிரம்பின் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3382 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டிருப்பதோடு வரும் காலத்தில் 3500 டாலரை தாண்டலாம் எனவும் கணிக்கப்பட்டிருப்பது நடுத்தர மக்களின் வயிற்றில் புளியை கரைப்பதாகவே இருக்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இந்திய ரூபாயின் மதிப்புப்படி 2 லட்சத்து 88 ஆயிரத்து 741 ரூபாய் 71 பைசாவாக உள்ளது.
டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் வர்த்தகத்தில் பெரும் சலசலப்பை கிளப்பிவிட்டிருக்கும் நிலையில் அமெரிக்கா பயன்படுத்தும் முக்கிய கனிமங்களின் இறக்குமதிகளை சோதிக்கவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரிவிலக்கு மோசடி பட்டியல் அமெரிக்காவின் வரிவிதிப்புகளையும் தாண்டி மற்ற நாடுகள் எப்படி பொருட்களை அனுப்புகிறது என்பது குறித்தும் ஆராய்கிறது. நாணய மதிப்பை செயற்கையாக குறைத்தல், ஏற்றுமதி சலுகைகள், போலி பொருட்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வரிவிலக்குகளை தவிர்க்க முயற்சிகள் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது என்பதே இதன் பின்னணி.
இதன் காரணமாக இந்த பட்டியலும் வரிவிதிப்பும் இணைந்து சீனாவுக்கு எதிரான நிதிநிலை கட்டுப்பாடுகளில் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் உலக அளவில் வர்த்தகம் ஆட்டம்காணும் சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கியே படையெடுக்கின்றனர். அதே நேரத்தில் டாலர் குறியீட்டு மதிப்பும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவான 98 என சரிந்துள்ளதாலும் தங்கத்தின் விலை மேலும் கடகடவென அதிகரித்து இருக்கிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதனை கண்டிப்பாக தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.