அலுவலகத்தை காலி பண்ணுங்க., தவெகவுக்கு சிக்கல் மேல் சிக்கல்..!

த.வெ.க. தலைவர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் சிறப்பு வெளியீடாக கடந்த ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. சரியான வெளியீட்டு தேதி குறித்து இன்னும் தெளிவு இல்லை.

இது ஒருபுறம் இருக்க, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இன்னும் நிறைவடையாததால் அந்த விவகாரமும் தீர்வு காணாமல் உள்ளது.

இந்நிலையில், த.வெ.க.க்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்ற தேர்தல் வியூக அலுவலகம் தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இந்த அலுவலகம் இயங்கும் கட்டிடம், கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமனாரும் தொழிலதிபருமான ‘லாட்டரி’ மார்ட்டினுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

ஆதவ் அர்ஜுனா, தனது மாமனாரின் அனுமதியுடன் அலுவலகத்தை நடத்தி வந்ததாக தகவல். ஆனால் தற்போது அந்த கட்டிடத்தை காலி செய்யுமாறு திடீரென அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. தரப்பில் இருந்து அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் நிலையில் திடீரென அலுவலகத்தை காலி செய்யும்படி கூறப்பட்டதால், தேர்தல் முடியும் வரை அவகாசம் வழங்குமாறு ஆதவ் அர்ஜுனா கேட்டதாக தெரிகிறது. எனினும், அவகாசம் வழங்க முடியாது என மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், த.வெ.க. தனது தேர்தல் வியூக அலுவலகத்திற்காக புதிய இடம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Related News

Latest News