மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்துள்ள முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற, ஈரானியக் கொடி தாங்கிய ‘Touska’ என்ற பிரம்மாண்ட சரக்குக் கப்பலை, அமெரிக்கக் கடற்படை அதிரடியாகத் தடுத்து நிறுத்திப் பறிமுதல் செய்துள்ளது. சுமார் 900 அடி நீளம் கொண்ட இந்தக் கப்பல், ஒரு விமானந்தாங்கி கப்பலுக்கு இணையான எடையைக் கொண்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்தச் செயல், முன்னரே தடை செய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளின் தொடர்ச்சி என்று கூறி, இந்தக் கப்பலின் என்ஜின் அறையில் துப்பாக்கியால் சுட்டு அதைச் செயலிழக்கச் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ‘ஆயுதமேந்திய கடல் கொள்ளை’ என்று வர்ணித்துள்ள ஈரான், இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
ஈரானின் ராணுவ மத்திய கட்டளை மையம் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா விதித்துள்ள இந்த முற்றுகையால், ஈரான் தங்களின் எண்ணெய் ஏற்றுமதியைப் பெரிய அளவில் இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தால் இஸ்லாமாபாத்தில் நடக்கவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்கா தனது தூதர்களைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பத் தயார் என்று அறிவித்திருந்தாலும், ஈரானியத் தரப்பிலிருந்து இதற்கு முறையான உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை. பேச்சுவார்த்தை குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர், “இராஜதந்திரத் துறையில் எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
ஆனால், இரு தரப்புக்கும் இடையே இப்போதும் பெரிய இடைவெளி இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி கப்பல் பறிமுதல் நடவடிக்கை, அமைதிப் பேச்சுவார்த்தையை முறியடித்து, மீண்டும் ஒரு நேரடி ராணுவ மோதலுக்கு இட்டுச் செல்லுமா? என்பதை உலகமே மிகுந்த கவலையுடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
