டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளில் பெரும்பாலானவை சட்டத்திற்கு முரண்பட்டவை என்பதால் அவை செல்லாது என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
.
இந்த வழக்கில், அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ், இந்த வரிகள் அனுமதிக்கப்பட்டதாக டிரம்ப் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும் அந்த வாதத்தை அமெரிக்கப் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து அதிரடி காட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு ட்ரம்ப் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். இதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் இந்த தீர்ப்பு அக்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, தீர்ப்பு நடைமுறைக்கு வந்திருந்தால் அதன் முடிவு உண்மையில் அமெரிக்காவை அழித்துவிடும் என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்பின் இந்த விமர்சனம் அவரது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் டிரம்ப், ‘மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வரிகள் நீக்கப்பட வேண்டும் என்று தவறாகக் கூறியது. ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ‘டிரம்ப்பிற்கு ஏதேனும் நேர்ந்தால் நான் ஜனாதிபதியாக பதவியேற்க தயார்’ என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியிருந்தார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாக, அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளிவந்து அடுத்த புயலை கிளப்பிவிட்டிருப்பது சர்வதேச அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.