இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இந்தியாவின் பெரும்பாலான மக்கள் தினமும் UPIஐ பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றனர். ஒரு மளிகை கடையிலிருந்து ஆன்லைன் ஷாப்பிங் வரைக்கும், யுபிஐ பரிவர்த்தனை நம்முடைய வாழ்வின் ஒரு அத்தியாவசிய அங்கமாகவே மாறி விட்டது.
ஆனால் சில நேரங்களில் நம்முடைய மொபைலில் இன்டர்நெட் இல்லை அல்லது நெட்வொர்க் இல்லாத இடத்தில் இருப்போம். அப்போது என்ன செய்வது? என்று கவலை வேண்டாம்! இனிமேல், இணையமே தேவையில்லாமல் ஆஃப்லைனிலும் பணம் செலுத்தும் வசதி உங்களுக்காக உள்ளது.
இந்த வசதியை நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக *99# என்ற USSD குறியீட்டை பயன்படுத்தினாலே போதும். இது எந்தவொரு ஸ்மார்ட்போனும் இல்லாமல், சாதாரண மொபைல் போனிலும் வேலை செய்யும்.
செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *99# டயல் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு, உங்களுக்குப் பிடித்த மொழியைத் தேர்வு செய்யலாம் — தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல விருப்பங்கள் இருக்கும்.
மொழியைத் தேர்ந்த பிறகு, பணம் அனுப்பும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறீர்கள் என்ற விவரங்களை – UPI ஐடி, மொபைல் எண், அல்லது வங்கி கணக்கு எண் — இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்கள்.
பின், அனுப்ப வேண்டிய தொகையை உள்ளீடுங்கள். கடைசியாக, உங்கள் UPI PIN எண்ணை உள்ளீடு செய்து பரிவர்த்தனையை உறுதிப்படுத்துங்கள்.
இப்படி சுலபமாக, இணையம் இல்லாமலேயே யுபிஐ மூலமாக பணம் அனுப்பலாம், பெறலாம், பேலன்ஸும் சரிபார்க்கலாம்.