உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் 60 வயதை கடந்த தம்பதியினர் காணாமல் போன சம்பவத்தை விசாரித்த போலீசார், அது ஒரு கொடூரமான இரட்டைக் கொலையாக மாறியுள்ளதை கண்டுபிடித்தனர்.
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ஷியாம் பகதூர் (62) மற்றும் அவரது மனைவி பபிதா (60) ஆகியோரை அவர்களது மகனான அம்பேஷ் கொன்றதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். பொறியாளராக பணியாற்றி வந்த அம்பேஷ், தனது பெற்றோர்களைக் கொன்று, உடல்களை ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி, சாக்குகளில் போட்டு ஆற்றில் வீசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் கூறுகையில், அம்பேஷுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அம்பேஷ் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்தை அவரது பெற்றோர் ஏற்க மறுத்தனர். மருமகளை வீட்டில் அனுமதிக்க மாட்டோம் என்றும், மகன் மனைவியை விட்டு பிரிய வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தபோதும், பெற்றோரின் நிலைப்பாடு மாறவில்லை.
பெற்றோரின் அழுத்தம் காரணமாக, அம்பேஷ் தனது மனைவியுடன் பிரிந்து செல்ல முடிவு செய்தார். அதற்கு ஜீவனாம்சமாக ரூ.5 லட்சம் தேவைப்பட்டது. இந்த பணத்திற்காக அவர் தனது தந்தையிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் ஷியாம் பகதூர் அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அம்பேஷ் தனது தாயார் பபிதாவை கல்லால் தாக்கியுள்ளார். வலியால் அலறிய பபிதாவைக் காப்பாற்ற ஷியாம் பகதூர் முயன்றபோது, அவரையும் தலையில் தாக்கினார். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடல்களை அப்புறப்படுத்த பெரிய பைகள் கிடைக்காததால், ரம்பத்தை பயன்படுத்தி உடல்களை ஆறு துண்டுகளாக வெட்டினார். அவற்றை சாக்குகளில் போட்டு காரின் பூட்டில் வைத்து, விடியற்காலையில் அருகிலுள்ள ஆற்றில் வீசி விட்டார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அம்பேஷை கைது செய்து விசாரித்துள்ளனர். இதில் தனது பெற்றோர்களைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் ஷியாம் பகதூரின் உடலின் ஒரு பகுதியை மீட்டனர். மேலும், கொலையில் பயன்படுத்தப்பட்ட அரைக்கும் கல்லும், உடல்களை வெட்ட பயன்படுத்திய ரம்பமும் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
