Thursday, February 5, 2026

அன்லிமிடெட் வீடியோக்கள், அதுவும் இலவசமாக!.. கூகுள், ஓபன்ஏஐ-க்கு போட்டியாக அடோப்

அடோப் நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ கருவியான Adobe Firefly தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை படங்களை உருவாக்குவதற்காக மட்டுமே பயன்பட்ட இந்த கருவி, இப்போது வீடியோக்களையும் உருவாக்கும் வசதியை பெற்றுள்ளது. முக்கியமாக, இந்த சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என்பதே பயனர்களை அதிகம் கவர்கிறது.

Adobe Firefly என்பது என்ன என்றால், நீங்கள் நினைக்கும் விஷயங்களை எழுத்துக்களாக (Text Prompt) உள்ளிடும் போது, அதனை படமாகவோ அல்லது வீடியோவாகவோ மாற்றித் தரும் அடோபின் ஏஐ தொழில்நுட்ப கருவியாகும். போட்டோஷாப் போன்ற சிக்கலான மென்பொருட்களை கற்றுக்கொள்ளாமல், தொழில்முறை தரத்திலான டிசைன்கள் மற்றும் காட்சிகளை எளிதாக உருவாக்க முடியும்.

சமீபத்தில் Adobe Firefly தனது புதிய “Video Model” அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், “சூரியன் மறையும் கடற்கரை” அல்லது “பறக்கும் கார்கள் கொண்ட எதிர்கால நகரம்” போன்றவற்றை டைப் செய்தால், சில விநாடிகளில் அதற்கேற்ற வீடியோவை தானாக உருவாக்கி வழங்குகிறது.

பயனர்களை ஈர்க்கும் வகையில், 2026 மார்ச் 16 ஆம் தேதி வரை படங்கள் மற்றும் வீடியோக்களை வரம்பில்லாமல் (Unlimited) உருவாக்கிக்கொள்ளலாம் என்ற சிறப்பு சலுகையை அடோப் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் டிஜிட்டல் கிரியேட்டர்களுக்கு பெரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

Adobe Firefly-ஐ இலவசமாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானவை. முதலில் firefly.adobe.com என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு ‘Sign In’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, கூகுள் அல்லது ஆப்பிள் ஐடி மூலம் இலவசமாக கணக்கை உருவாக்கலாம். பின்னர் முகப்புப் பக்கத்தில் “Text to Image” அல்லது “Text to Video” என்ற விருப்பங்களில் தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு, உங்களுக்கு வேண்டிய காட்சியை ஆங்கிலத்தில் டைப் செய்து ‘Generate’ பட்டனை அழுத்தினால், சில நொடிகளில் ஏஐ உங்கள் கற்பனையை திரையில் காட்டும். பிடித்திருந்தால், அதை நேரடியாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

Adobe Firefly-யின் முக்கிய அம்சங்களில் Generative Fill குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு படத்தில் தேவையற்ற நபர் அல்லது பொருளை நீக்கலாம் அல்லது இல்லாத ஒன்றைச் சேர்க்கலாம். அதேபோல், Text Effects வசதியின் மூலம் எழுத்துக்களுக்கு அழகான மற்றும் தனித்துவமான டிசைன்களை வழங்க முடியும். மேலும், இது காப்புரிமை சிக்கல்கள் இல்லாத தரவுகளை பயன்படுத்தி உருவாக்கப்படுவதால், வர்த்தக நோக்கத்திற்கும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

மொத்தத்தில், Adobe Firefly படங்களும் வீடியோக்களும் உருவாக்க விரும்பும் அனைவருக்கும் எளிதான, சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள ஏஐ கருவியாக மாறியுள்ளது.

Related News

Latest News