Thursday, October 9, 2025

கடலுக்கு அடியில் சுரங்கம்! அழியும் அதிசய சுறாக்கள்! மனிதனின் அடுத்த பேராபத்து!

கடலின் இருண்ட ஆழத்தில், நாம் இதுவரை கண்டிராத பல உயிரினங்கள் வாழ்கின்றன. அதில், சுறாக்கள் (Sharks), திருக்கைகள் (Rays) மற்றும் பேய் சுறாக்கள் எனப்படும் விசித்திரமான கைமேராக்களும் (Chimaeras) அடக்கம். ஆனால், மனிதனின் பேராசையால், இந்த அதிசய உயிரினங்கள் இப்போது ஒரு புதிய ஆபத்தைச் சந்திக்கின்றன. அதுதான், ஆழ்கடல் சுரங்கம் (Deep-sea Mining)!

ஹவாய் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு புதிய ஆய்வில், ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆழ்கடலில் கனிமங்களை வெட்டி எடுப்பதற்காகக் குறிவைக்கப்பட்டுள்ள பகுதிகளில், சுமார் 30 வகையான சுறா இனங்கள் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், இந்த இனங்களில் மூன்றில் இரண்டு பங்கு, ஏற்கனவே அழியும் நிலையில் உள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த ஆழ்கடல் சுரங்கத்தால் என்ன பாதிப்பு?என்றால், சுரங்க இயந்திரங்கள், கடலின் தரையை மொத்தமாகச் சுரண்டி எடுக்கும். இதனால், சுறாக்கள் முட்டையிடும் இடங்கள், அதாவது அவற்றின் நர்சரிகள், மொத்தமாக அழிக்கப்படும். மேலும், சுரங்கப் பணியால் கிளம்பும் லட்சக்கணக்கான டன் மணல் மற்றும் துகள்கள், தண்ணீரை மாசுபடுத்தி, சுறாக்களால் சுவாசிக்க முடியாத, வாழ முடியாத ஒரு நரகமாக அந்தப் பகுதியை மாற்றிவிடும்.

உலகின் இரண்டாவது மிகச்சிறிய சுறாவான பிக்மி ஷார்க் (Pygmy Shark), மெகா மவுத் ஷார்க் (Megamouth Shark), சாக்லேட் ஸ்கேட் (Chocolate Skate), பாயின்ட்-நோஸ்டு கைமரா (Point-nosed Chimaera) என பல அரிய வகை உயிரினங்கள் இந்த ஆபத்தில் உள்ளன. விஞ்ஞானிகள் இந்த உயிரினங்களைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்து முடிப்பதற்குள், அவை மொத்தமாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே இந்த ஆழ்கடல் சுரங்க நடவடிக்கைகளை முறைப்படுத்தி, இந்த அரிய உயிரினங்களைக் காக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News