உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள இராணுவ நடவடிக்கையால், அந்நாடு ஈடுகட்டமுடியாத சேதங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக விலைமதிப்பில்லா உயிர்களை இழந்துவருகிறது உக்ரைன்.
ரஷ்ய படைகள் இனப்படுகொலை நடத்தி வருவதகாவும், அதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளதாகவும், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் , ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் குழந்தைகளை பாதுகாக்க உக்ரைனிய பெற்றோர் செய்யும் செயல் இதயங்களை உறையவைத்துள்ளது.
போர் தீவிரமடைந்து வருவதால், தங்கள் குழந்தைகளின் உடல்களில் குடும்ப விவரங்களை எழுதத் தொடங்கியுள்ளனர் உக்ரைனிய பெற்றோர்கள்.
ட்விட்டரில் உக்ரேனிய பத்திரிகையாளர் ஒருவர் , பாதிக்கப்பட்ட ஒருவரின் இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்,இதன் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளின் உடல்களில் தங்கள் தனிப்பட்ட விவரங்களை எழுதுகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
உக்ரேனிய தாய்மார்கள் குழந்தைகளின் உடல்களில் தங்கள் குடும்ப உறவினர்களின் தகவல்களை எழுதிவருகிறார்கள்.அவர்கள் கொல்லப்பட்டால் குழந்தைகள் சம்பத்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என்ற நம்பிக்கை உடன் இது போன்று செய்கின்றனர் .
மற்றொரு செய்திநிறுவனம், ரஷ்யப் படைகள் தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகளை “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த வாரம் உக்ரைனின் புச்சா நகரில் நூற்றுக்கணக்கானவர்களின் உடல்களுடன் குழந்தைகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.