Thursday, January 29, 2026

சென்னையில் பல் மருத்துவமனையில் புகுந்து பணம் திருடிய 2 பேர் கைது

சென்னை நொளம்பூர் 22 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் பரத். நொளம்பூர் பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 22 ஆம் தேதி இரவு மருத்துவமனை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

23 ஆம் தேதி காலை மருத்துவமனையை சுத்தம் செய்ய சுசிலா என்பவர் வந்த போது மருத்துவமனை திறந்து கிடந்தது. உடனே பரத்திற்கு தகவல் தெரிவித்தார். நேரில் வந்து பார்த்த போது 25 ஆயிரம் பணம் மற்றும் காமாட்சி விளக்கு, குத்து விளக்கு ஒன்று கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

அதிர்ச்சியடைந்த டாக்டர் பரத் இது குறித்து நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மருத்துவமனை சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் பைக்கில் 2 பேர் இரும்பு கம்பியுடன் பூட்டை உடைப்பது தொடர்பான காட்சிகள் பதிவாகி இருந்தது.

இது குறித்து நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையடித்தது தொடர்பாக நெற்குன்றத்தைச் சேர்ந்த லட்சுமணன் (22), மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த அருண் குமார் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் கொள்ளையடித்த விளக்குகளை மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் விலைக்கு போட்டது தெரிந்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான லட்சுமணன் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் இருக்கிறது. கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

Related News

Latest News