மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் (43) என்பவர் சென்னையில் உள்ள தனது நண்பரை சந்தித்துவிட்டு கோயம்பேடு 100 அடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 நபர்கள் மடக்கிப்பிடித்து மிரட்டி சட்டைப்பையில் இருந்து ரூபாய் 4,500ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.
இதுதொடர்பாக கோயம்பேடு கே11 காவல்நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட நெற்குன்றத்தைச் சேர்ந்த கதிரவன் (30) மற்றும் அரும்பாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ் (58) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 4,000 பணம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
