Friday, February 13, 2026

‘என்னை சீண்டிப்பார்ப்பவர்களுக்கு ஒன்று கூறுகிறேன்’ – சேலத்தில் விஜய் பேசியது என்ன?

சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது விஜய் பேசியதாவது :

மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார்? மகிழ்ச்சியாக இருந்தால் ஏன் இத்தனை போராட்டங்கள் நடக்கிறது.

இடம், குடிநீர், வேலை, விலைவாசி என அனைத்தும் பிரச்சனையாக இருக்கும்போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள்?

ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு 70%, கடந்தாண்டு 90%, இப்போது 80% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்.

பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த புலவர் பெருமானே, இல்லை புளுகர் பெருமானே… முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுவது அனைத்துமே அண்டப்புளுகு ஆகாசப்புளுகு.

ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு ஒத்துவராத திட்டங்களை அறிவிக்க மாட்டேன்.

ஆட்சிக்கு வந்தால் அவங்க அது தரல, இது தரல என புலம்ப மாட்டேன். உங்களுக்காக எந்த எக்ஸ்ட்ரீம் வரைக்கும் சென்று போராடுவேன்.

களமே சொல்கிறது இரண்டே இரண்டு பேர் இடையில் தான் போட்டி. ஒன்னு தூய சக்தி த.வெ.க. மற்றொன்று தீய சக்தி தி.மு.க.

விஜய் அவரை எதிர்க்கவில்லை, இவரை எதிர்க்கவில்லை என்கிறார்கள். இது சட்டமன்ற தேர்தல், நமது டார்கெட் தி.மு.க. தான்.

மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? இது தான் தேர்தல்.

சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்புகளில் ஸ்டாலின் அரசு அவுட் ஆஃப் கன்ட்ரோல்.

நமக்கு அவர்களைபோல் கொள்ளையடிக்க அனுபவம் இல்லை, அது எல்லாம் எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

எங்கள் ஓட்டு எங்கள் உரிமை எங்களை யாரும் விலைக்கு வாங்க உரிமையில்லை, எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். எந்த கட்சியையும் அழிக்க, ஒழிக்க நான் அரசியலுக்கு வரவில்லை.

வெறுப்பு அரசியல் செய்ய நான் வரவில்லை. மக்களுக்கு என் நன்றி கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்.

அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள். மக்களே உங்களையே கேட்கிறேன் அனுபவம் என்று கூறுகிறார்களா, அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்தை தாண்டி என்ன செய்தார்கள்?

அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?

அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அடுத்தவர்கள் முகவரியில் அரசியல் வாதிகளாக இருக்கும் அனைவருக்கும் ஒரு சவால்.

என்னைப்போல் சொந்தமாக ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க உங்களுக்கு தில், திராணி இருக்கிறதா?

75 வருடம், 50 வருடம் என அரசியல் கட்சி நடத்தி வருபவர்களை மீறி களத்தில் தனியாக நின்று தவெக மக்கள் சக்தியாக மாறியுள்ளது.

எந்த விஷயத்தில் நம்மை கிண்டல், கேலியாக பேசுகிறார்களோ அதை வெற்றியாக மாற்றிக்காட்டுவோம்.

என்னை சீண்டிப்பார்ப்பவர்களுக்கு ஒன்று கூறுகிறேன், என் தாய் நாடாக தமிழ்நாடு தான் எனது வீடு.

விஜய் பனையூரை விட்டு வெளியே வா என அழைப்பவர்களுக்கு என் வீடு எங்கே இருக்கிறது என்றாவது தெரியுமா?

என் வீடான தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களும் என் சொந்தம், தமிழ்நாட்டின் முதல் படை வீரன் நான்.

தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் சார் தான் அவுட் ஆஃப் கன்ட்ரோல்.

மொத்தத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியே அவுட் ஆப் கன்ட்ரோல் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related News

Latest News