Thursday, December 26, 2024

190 ஆவது பிறந்த நாள் கொண்டாடிய ஆமை

ஆமை ஒன்று தனது 190 ஆவது பிறந்த நாளில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலினா பகுதியில் கவர்னர் மாளிகையில் வாழ்ந்துவரும் ஜொனாதன் என்னும் ஆமை சமீபத்தில் தனது 190 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. அத்துடன், தற்போது உலகில் வாழும் நில விலங்குகளில் மிக அதிக வயதுடைய உயிரினம் என்னும் கின்னஸ் சாதனையையும் பெற்றுள்ளது.

இந்த ஆமை 1832 ஆம் ஆண்டு, ஷெசல்ஸ் தீவில் பிறந்ததாக நம்பப்படுகிறது. 50 வயதில் செயின்ட் ஹெலினாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு கவர்னர் மாளிகையில் இதர மூன்று ஆமைகளோடு வாழ்ந்து வருகிறது..

இதில் விந்தை என்னவென்றால், இந்த ஜொனாதன் ஆமைக்குத் தற்போது பார்வைத் திறன் இல்லையாம். வாசனையை உணரும் திறனையும் இழந்துவிட்டதாம். அதேசமயம், நன்றாகக் கேட்கும் திறன் உள்ளதாம். மனிதர்களோடு நெருங்கிப் பழகுகிறதாம்.

அதனால், கால்நடை மருத்துவர்களே வாரம் ஒருமுறை இந்த ஜொனாதனுக்கு கலோரிகள், வைட்டமின்கள், மினரல்கள் நிரம்பிய உணவுகளைத் தங்கள் கைகளால் ஊட்டிவிடுகின்றனராம். மற்ற நேரங்களில் கீரை, முட்டைக்கோஸ், வெள்ளரி, கேரட், ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றையும் அந்தந்த பருவங்களில் விளையும் பழங்களையும் விரும்பி உண்கிறதாம்.

பொதுவாக, ஆமைகள் நீண்ட ஆயுள்கொண்டவை. சாதகமான சூழ்நிலை அமைந்தால் 200 முதல் 300 ஆண்டுகள் வரை ஆமைகள் வாழும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஆமைகளால் உணவு, நீரின்றி நெடுங்காலம் வாழமுடியும். இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தவும் சிறிதுநேரம் அதை நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்கவும் ஆமைகளால் முடியும். இதயம் நிற்கும்போது ஆமை உறைந்து அசைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news