மடகாஸ்கரின் கல் முள்ளுகள் நிறைந்த அபூர்வ காடு! இந்த மாதிரி கூட இடம் இருக்கா?

மடகாஸ்கர் தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள “Tsingy de Bemaraha National Park” உலகின் மிக அபூர்வமான காடுகளில் ஒன்றாகும். இந்த காடு மரங்களால் அல்ல, கல் முள்ளுகளால் நிரம்பியுள்ளது என்பது இதன் வியப்பூட்டும் தன்மை.

“Tsingy” என்ற சொல் மடகாஸ்கர் மொழியில் “நுனியுடன் நிற்கும் இடம்” என்று பொருள். உண்மையிலும், இங்குள்ள சுண்ணாம்பு கற்கள் கூர்மையான முள்ளுகளாக வானை நோக்கி உயர்ந்திருப்பதால், மனிதர்கள் காலில் செல்ல முடியாத அளவுக்கு ஆபத்தான வடிவத்தில் காணப்படுகின்றன.

சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள இந்த காடு, ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காடில் சுண்ணாம்பு கற்கள் காலப்போக்கில் நீர், காற்று, மழை ஆகியவற்றின் தாக்கத்தால் துளையிட்டு உருவானது. அவை இன்று இயற்கையின் சிற்பங்களாக மாறி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன.

அதிசயமாக, இந்த கடினமான நிலப்பரப்பில் கூட சில விலங்குகள் மற்றும் தாவரங்கள் தங்களுக்கான வாழ்விடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளன. குறிப்பாக லீமர் வகை குரங்குகள், சில அரிய ஆந்தைகள் மற்றும் பல்லிகள் இங்கே காணப்படுகின்றன.

பொதுவாக பசுமையால் நிரம்பிய காடு என்றால் நினைவில் வருவது மரங்களே. ஆனால் “Tsingy Forest” அதனை முறியடித்து, கற்களும் காடாக மாற முடியும் என்பதை இயற்கையின் அதிசயமாக நிரூபிக்கிறது.

Related News

Latest News