டிரம்ப் கொடுத்த அணு ஆயுத ஒப்புதல்! சீனா, கிம் ஜாங் உன் அதிர்ச்சி – 150 பில்லியன் டாலர் இரகசியம்!

உலக அரசியலில் ஒரு பெரும் பரபரப்பு! வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்கொரியாவுக்கு ஒரு பிரம்மாண்டமான சக்தியை வழங்கியிருக்கிறார். இனி தென்கொரியாவும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டும். இந்த ஒரு முடிவு, கொரிய கடல் பகுதியில் அதிகார சமநிலையை மாற்றியமைக்கப் போகிறது.

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், அமெரிக்காவிடம் இந்த உதவியை சில நாட்களுக்கு முன்புதான் கேட்டிருந்தார். அதற்கு உடனடியாக பச்சைக்கொடி காட்டியுள்ளார் டிரம்ப். “எங்கள் ராணுவக் கூட்டணி முன்பை விட வலுவாக இருக்கிறது. அதனால், தென்கொரியாவிடம் இருக்கும் பழைய, மெதுவாகச் செல்லும் டீசல் நீர்மூழ்கிகளுக்குப் பதிலாக, பல மடங்கு வேகமான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைக் கட்ட நான் அவர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்,” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளார்.

ஏன் இந்த திடீர் முடிவு? வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது கடற்படையை மிக வேகமாக பலப்படுத்தி வருகிறார். ரஷ்யாவின் உதவியுடன் புதிய போர்க்கப்பல்களை உருவாக்கி, கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிறார். இது மட்டுமில்லாமல், சீனக் கப்பல்களையும் கண்காணிக்க வேண்டிய நெருக்கடி தென்கொரியாவுக்கு இருக்கிறது. இந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவே, அவர்களுக்கு இந்த சக்திவாய்ந்த நீர்மூழ்கி தேவைப்படுகிறது.

இந்த ராணுவ ஒப்பந்தத்தின் பின்னால் ஒரு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமும் இருக்கிறது. இந்த அணு நீர்மூழ்கிக் கப்பல், அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) கப்பல் கட்டும் தளத்தில்தான் கட்டப்பட உள்ளது. இதன் மூலம், அமெரிக்க கப்பல் கட்டும் துறையில் 150 பில்லியன் டாலர் முதலீடு செய்ய தென்கொரியா ஒப்புக்கொண்டுள்ளது. இது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் ஒரு பெரிய ஊக்கமாக அமையும்.

இந்த ஒரு முடிவு, கொரிய கடல் பகுதியில் அதிகார சமநிலையை மொத்தமாக மாற்றியமைத்துள்ளது. இது வடகொரியாவுக்கும், மறைமுகமாக சீனாவுக்கும் விடுக்கப்பட்ட ஒரு நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்குமா, அல்லது அமைதிக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News