அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சிக்கல்கள் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், டிரம்ப் அதிபராக வந்த பிறகு, சட்டபூர்வ குடியேறியவர்களும் பல பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவானது.
இப்போது, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உட்பட, கிரீன் கார்டு வைத்திருக்கும் பல லட்சம் பேர் பாதிக்கப்படக் கூடிய புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அமெரிக்க நீதித்துறையானது எந்தவொரு நபரின் கிரீன் கார்டையும், எந்த நேரத்திலும் ரத்து செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு முழு அதிகாரம் உள்ளது என அறிவித்துள்ளது.
இதனால், ‘ஒருமுறை கிரீன் கார்ட் வந்துவிட்டால் நிம்மதியாக வாழலாம்’ என்ற கனவு இப்போது ஒரு பயங்கரமான எண்ணமாக மாறி வருகிறது. இது ஒரு பெரிய விவாதமாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் நியூ ஜெர்சியின் இமாம் முகமது வழக்கின் பின்னணியில் வெளிச்சத்திற்கு வந்தது. அவருக்கு தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று கூறி கிரீன் கார்ட் மறுக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அந்த வழக்கின் மூலம் டிரம்ப் நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு என்னவென்றால் கிரீன் கார்ட் மீது எதாவது நிர்வாக விதிமுறைகள் தவறு இருந்தால், எப்போது வேண்டுமானாலும் அதை ரத்து செய்யலாம் என்ற விதிமுறை இப்போது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
விண்ணப்பத்தில் சிறிய பிழை இருந்தால்கூட, 10, 20 ஆண்டுகள் கழித்தும் நடவடிக்கை எடுக்கலாம் என நீதித்துறையின் வக்கீல் கூறியிருப்பது, இந்தியர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது நியாயமற்றதும், எதிர்பாராததுமானதுமாகவே இருக்கிறது. டிரம்ப் ஆடும் இந்தக் கோர தாண்டவம், அமெரிக்காவில் வாழும் இந்திய மக்களின் கனவுகளை சிதைக்கக் கூடும் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது.