இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்னு சேர்ந்ததுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்குத்தான் நோபல் பரிசு கொடுக்கணும் என்று, அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் சொல்லியிருப்பது, உலக அரசியலில் ஒரு பெரிய சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. “என்னடா இது, வம்படியா இருக்கு!” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவர் சொன்ன காரணத்தைக் கேட்டால், நீங்களும் ஆமாம் என்று தலையாட்டுவீர்கள்.
ரஷ்ய அதிபர் புதின், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தப் பயணம், ரஷ்யாவுக்கு ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், உலகின் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காத ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை, இந்தியா புதினுக்குக் கொடுத்தது. இது அமெரிக்காவுக்கு, குறிப்பாக டிரம்ப்புக்கு, ஒருவிதமான கடுப்பைக் கொடுத்திருக்கிறது.
இதுபற்றிப் பேசிய அமெரிக்காவின் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின், “இந்தியா ரஷ்யா பக்கம் போவதற்கு முக்கியக் காரணமே, டிரம்ப் இந்தியாவையும், பிரதமர் மோடியையும் நடத்திய விதம்தான்,” என்று கிண்டலாகக் கூறியுள்ளார். மேலும், “டிரம்ப், இந்தியாவை மிரட்டிப் பார்த்தார். ஆனால், அந்த மிரட்டல்தான், இந்தியாவை ரஷ்யாவுடன் இன்னும் நெருக்கமாகச் சேர்த்து வைத்துவிட்டது. அதனால், இந்தியாவையும், ரஷ்யாவையும் ஒன்று சேர்த்ததற்காக, டிரம்ப்புக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்,” என்று கலாய்த்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை, அமெரிக்கா விமர்சிப்பது ஒரு இரட்டை வேடம். ஏனென்றால், அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து பல பொருட்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது,” என்று அமெரிக்காவின் குட்டையும் உடைத்துள்ளார். “இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளரப்போகிறது. அவர்களின் எரிசக்தித் தேவைகளை அவர்கள் பார்த்துக் கொள்வதில் என்ன தவறு? என்று இந்தியாவுக்கு ஆதரவாகவும் அவர் பேசியுள்ளார்.
மொத்தத்தில், டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகள், அவருக்கு எதிராகவே திரும்பி, இந்தியாவையும், ரஷ்யாவையும் ஒரு பலமான கூட்டணியாக மாற்றிவிட்டது. இதைத்தான், ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்று சொல்வார்களோ? இந்த அரசியல் சதுரங்கத்தில், அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
