8 கப்பல்களை சம்பவம் செய்த டிரம்ப்! ஈரானின் கழுத்தை நெரிக்கும் அமெரிக்கா!

உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்தி வரும் ஹோர்முஸ் ஜலசந்தியில், அமெரிக்கா தனது முற்றுகையை மிகத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவின்படி, ஹோர்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களை அமெரிக்கப் படைகள் கடுமையாகக் கண்காணித்து வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இந்த முற்றுகையின் முதல் 24 மணி நேரத்திலேயே, அமெரிக்கக் கடற்படை ஈரானுடன் தொடர்புடைய எட்டு எண்ணெய் கப்பல்களை இடைமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளது.

இதற்காக, 15-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் அமெரிக்கா களமிறக்கியுள்ளது. இடைமறிக்கப்பட்ட கப்பல்களில் சீனாவின் ‘ரிச் ஸ்டாரி’ என்ற டேங்கர் கப்பலும் அடங்கும். அமெரிக்கக் கடற்படையினர் ரேடியோ மூலம் எச்சரிக்கை விடுத்தவுடன், அந்த எட்டு கப்பல்களும் சோதனையின்றி தங்களின் பாதையை மாற்றிக்கொண்டு மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டன.

ஈரானின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 90 சதவீதத்திற்கு மேல் கடல்வழி வணிகத்தையே நம்பியுள்ளது. இந்த முற்றுகை தொடங்கி 36 மணி நேரத்திற்குள்ளாகவே, ஈரானின் அனைத்து கடல்வழிப் பொருளாதார வர்த்தகமும் முற்றிலுமாக முடக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

உலகிற்குத் தேவையான ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் செல்லும் இந்த முக்கிய நீர்வழிப்பாதை முடக்கப்பட்டிருப்பது, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. எரிபொருள் விலை பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது, இது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதும் உள்நாட்டில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் இந்த ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதித்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவற்றை அகற்றும் பணியிலும் அமெரிக்கக் கடற்படை ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஈரானைக் கட்டுப்படுத்த அமெரிக்கா எடுத்துள்ள இந்த அதிரடி ராணுவ முற்றுகை, மத்திய கிழக்கு ஆசியாவின் போர்ச் சூழலை எந்தத் திசையை நோக்கி நகர்த்தப் போகிறது என்பதை உலக நாடுகள் மிகுந்த கவலையுடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன.

Related News

Latest News