உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு, ஒரு மிகப்பெரிய வெற்றியில் முடிந்திருக்கிறது. இந்த சந்திப்புக்கு 10க்கு 12 மார்க் கொடுத்திருக்கிறார் டிரம்ப். கடந்த ஆறு ஆண்டுகளாக நேரில் சந்தித்துக் கொள்ளாத இந்த இரு பெரும் தலைவர்களும் சந்தித்ததன் விளைவாக, ஒரு புதிய வர்த்தகப் போர் தவிர்க்கப்பட்டுள்ளது. அப்படி என்னதான் நடந்தது இந்த சந்திப்பில்? வாங்க விரிவாகப் பார்க்கலாம்.
பல மாதங்களாக புகைஞ்சுகிட்டு இருந்த அமெரிக்க-சீனா வர்த்தகப் பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதுதான், ‘அரியவகை கனிமங்கள்’ தொடர்பான ஒரு வருட ஒப்பந்தம். நம்முடைய செல்போனில் இருந்து, கார்கள், ஏன் ராணுவத் தளவாடங்கள் வரைக்கும் இன்றியமையாத தொழில்நுட்பப் பொருட்களைத் தயாரிக்க இந்த அரியவகை கனிமங்கள்தான் ஆதாரம். இதன் உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதால், இந்த ஒப்பந்தம் உலகப் பொருளாதாரத்துக்கே ஒரு பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் டிரம்ப் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
இதுமட்டுமல்ல, சீனாவிலிருந்து வரும் ஃபெண்டானில் தொடர்பான பொருட்கள் மீதான வரியை 10 சதவீதமாகக் குறைக்கவும் இந்த சந்திப்பில் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பதால், இந்த சந்திப்பு உலக அளவில் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.
ஆனால், சில வாரங்களுக்கு முன்னாள் நிலைமையே தலைகீழாக இருந்தது. இரு நாடுகளும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டிருந்தன. சீனா, இந்த அரியவகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு திடீரென கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்குப் பதிலடியாக டிரம்ப், வரும் சனிக்கிழமையிலிருந்து சீனாவின் அனைத்துப் பொருட்கள் மீதும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். இதனால், உலகமே ஒரு புதிய, மிக மோசமான வர்த்தகப் போரை எதிர்பார்த்து தீவிர பதட்டத்தில் இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் டிரம்ப் தனது கடுமையான நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டு, இந்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்திருக்கிறார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “அரியவகை கனிமங்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது, இது உலகத்துக்கானது” என்று பெருமிதத்துடன் கூறினார். இந்த சந்திப்புக்கு 10க்கு 12 மதிப்பெண் கொடுத்ததிலிருந்தே, இந்த ஒப்பந்தம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தற்போதைக்கு ஒரு மிகப்பெரிய வர்த்தகப் போர் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு வருட ஒப்பந்தம், உலக நாடுகளுக்கு ஒரு தற்காலிக நிம்மதியைக் கொடுத்திருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
