அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகளாவிய பாதுகாப்புக்காக “கோல்டன் டோம்” என்ற புதிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இதற்கான செலவு சுமார் \$175 பில்லியன், ஆனால் சில மதிப்பீடு \$500 பில்லியன் வரை செலவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் பூமியில் இல்லை – விண்வெளியில் அமையப்போகும் முதல் அமெரிக்க ஆயுதம் இது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாலிஸ்டிக், ஹைப்பர்சோனிக், ட்ரோன் தாக்குதல்களை விண்வெளியிலேயே தடுக்க இது உருவாக்கப்படுகிறது.
இது குறித்து டிரம்ப் பேசுகையில் ‘நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறேன்’ அதற்கான தொடக்கம் தான் இது என கூறியிருக்கிறார்.
இந்த திட்டத்தை ஜெனரல் மைக்கேல் குட்லின் தலைமையிலான குழு கவனிக்கும். அவருக்கு ஏவுகணை பாதுகாப்பில் 30 வருட அனுபவம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“கோல்டன் டோம்” மூலம் விண்வெளியில் வரும் ஏவுகணைகளை ரியல் டைமில் கண்டறிந்து, தூரத்திலேயே அழிக்க முடியும். நிலம், கடல், விண்வெளி மூன்றிலும் ஒரே நேரத்தில் செயல்படும் இந்த அமைப்பு, உலகின் எந்த மூலையிலிருந்தும் வரும் தாக்குதல்களையும் எதிர்க்கும்.
முதற்கட்ட நிதியாக \$25 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா இதில் ஆர்வம் காட்டியது. ஆனால் ரஷ்யா மற்றும் சீனா கடுமையாக எதிர்த்துள்ளன. இது விண்வெளியை போர்க்களமாக மாற்றும் அபாயம் என்றும், உலக பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்கா சொல்வது என்னவென்றால் – “விண்வெளிக்கே பாதுகாப்பு தேவை” என்று … ஆனால் உலக நாடுகளோ – “இது பாதுகாப்பா, இல்லை போர் துவக்கமா?” என அமெரிக்காவை கடுமையாக எச்சரிக்கிறது .