சீனா மீதான இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்த ட்ரம்ப்! ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் நடந்தது என்ன?

தென் கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடந்த சந்திப்பு முக்கிய ஒப்பந்தத்துடன் நிறைவடைந்தது.

சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் உலகப் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடின. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘இந்த பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. ஃபெண்டானில் உற்பத்தியை குறைப்பதில் சீனா உறுதி அளித்துள்ளது. அவர்கள் வலுவான நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என நம்புகிறேன்’ என்றார்.

மேலும், இதனைத் தொடர்ந்து அமெரிக்கா சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57% இலிருந்து 47% ஆக குறைத்துள்ளதாகவும் அவர் அறிவித்தார். ‘இந்த வரி குறைப்பு ஒப்பந்தம் ஒரு ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்’ என ட்ரம்ப் தெரிவித்தார்.

அவர் மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வதாகவும், பின்னர் ஜி ஜின்பிங் அமெரிக்கா வருவார் என்றும் கூறினார். சீனாவுடன் இருந்த அரிய மண் தாதுக்கள் பிரச்சினையும் தீர்க்கப்பட்டதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

தைவான் விவகாரம் குறித்து எந்த பேச்சும் நடைபெறாத நிலையில், உக்ரைன் பிரச்சனை தொடர்பாக இரு தலைவர்களும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பு, அமெரிக்கா–சீனா உறவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் கருதுகின்றன.

Related News

Latest News