அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டன் நகரத்தில் குற்ற அவசரநிலை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து, ட்ரம்ப் 800 தேசிய பாதுகாப்பு படையினரை நகரம் முழுவதும் பணியமர்த்தியுள்ளார்.
பாதுகாப்பு படையினர், நகர காவல்துறையினருடன் சேர்ந்து நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு ரோந்துகள், ஃபெடரல் கட்டிடங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினருக்கு யாரையும் கைது செய்யும் அதிகாரம் இல்லை. ஆனாலும் சட்ட அமலாக்கத்திற்கு உதவும் வகையில் தற்காலிகமாக தடுத்து வைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி முதல் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 29 பேர் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 1,650க்கும் மேற்பட்டோர் இந்த சட்ட அமலாக்க நடவடிக்கையில் பங்கேற்று வருவதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
வாஷிங்டன் நகரத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ட்ரம்ப் கூறியதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரவுகளின்படி, 2024ல் வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, இது அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நகரத்தை மீட்டெடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என ட்ரம்ப் கூறியுள்ளார். பாதுகாப்பு படையினர், சட்டம் மற்றும் ஒழுங்கு மீண்டும் நிலைநிறுத்தப்படும் வரையில் நகரத்தில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.