2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது தாம்பரம் அருகே பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், அவரது தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் இருவரும் பாஜகவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால், இதுவரை அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் உள்ளது.
