பூமியின் மிகப்பெரிய மலைத்தொடர்களுக்கு அடியில், பல மில்லியன் ஆண்டுகளாக மறைந்திருந்த இயற்கை ஹைட்ரஜனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாம் சாதாரணமாக மலைகளை ரசிப்போம். ஆனால் அந்த மலைகளின் கீழ், உலக எரிசக்தி தேவையை மாற்றக்கூடிய ‘புதையல்’ மறைந்து கிடக்கும் என்பது ஆச்சரியமாக உள்ளது.
தங்கம் அல்லது வைரம் அல்ல… லட்சக்கணக்கான ஆண்டுகளாக பூமி உருவாக்கி சேமித்து வந்த இயற்கை ஹைட்ரஜன் தான் அது. எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு பெரிய மாற்றாக அமையக்கூடிய சக்தியாக இதை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த ஹைட்ரஜன் உருவானது எப்படி? ஆல்ப்ஸ் போன்ற உயரமான மலைத்தொடர்கள் உருவாகும்போது பூமித்தட்டுகள் மோதி, ஆழத்தில் இருந்த பாறைகள் மேலே தள்ளப்பட்டன. அந்தப் பாறைகளுக்கும் நிலத்தடி நீருக்கும் இடையே ஒரு ரசாயன செயல்முறை நடக்கிறது. ‘செர்ப்பென்டைனைசேஷன்’ எனப்படும் இந்த செயல்முறையில், ஆலிவைன் என்ற பாறை மற்றும் நீர் சேர்ந்து இயற்கையாகவே ஹைட்ரஜன் வாயுவை உருவாக்குகின்றன.
அதேபோன்று ‘ரேடியோலிசிஸ்’ எனப்படும் மற்றொரு செயல்முறையில், யுரேனியம் போன்ற தனிமங்களின் கதிர்வீச்சு நீரைப் பிளந்து ஹைட்ரஜனைக் கொடுக்கிறது. இவ்வாறு உருவான ஹைட்ரஜன், பாறை இடுக்குகளில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக தேங்கி கிடந்து இருந்திருக்கிறது.
இந்த கண்டுபிடிப்பு வெளிவந்தவுடன் உலக நாடுகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பல அரசாங்கங்களும் நிறுவனங்களும் ‘நம்முடைய மலைகளின் அடியிலும் ஹைட்ரஜன் இருக்குமா?’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. மேலும் இந்த ஹைட்ரஜனை எடுக்கும்போது விலை உயர்ந்த ஹீலியம் வாயுவும் இணையாகக் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எப்படியிருந்தாலும், நிலத்தடி நீர்வளம் மற்றும் பல்லுயிர் அமைப்புகளை பாதிக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளுடன் இந்த வளத்தை சுரங்கம் செய்வது முக்கியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
